ஆந்திரா: பிரம்மாண்டமாக நடந்த ‘தடியடி’ திருவிழா... 70-க்கும் மேற்பட்டோர் காயம்! #Video
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே தேவரகட்டுவில் நடந்த தடியடி நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தசரா விழாவை முன்னிட்டு, மலமல்லீஸ்வர சுவாமி கோயில் திருவிழா களைகட்டியது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக, தடியால் தாக்கிக் கொள்ளும் நிகழ்வு வழக்கம் போல் நடைபெற்றது. இந்த திருவிழாவில், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே, தீவட்டிகளுடன் தடியால் அடித்துக் கொள்ளும் நிகழ்வின் போது, நெரிசல் ஏற்பட்டது. தடியடி மற்றும் நெரிசலில் சிக்கியதில், சுமார் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தேவர்கட்டு மலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த திருவிழாவை கோயிலில் கொண்டாடி மகிழ்வர். கொண்டாட்டத்தின் போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொள்வது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தடிகளை ஒன்றோடு ஒன்று தாக்குவதர்கு பதில், சிலர் அத்தடிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன.
இதனால் திருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதை முன்னிறுத்தி திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக, அம்மாநிலத்தின் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தபோதிலும் ஐதீகம் என்ற பெயரில் இது அங்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி நேற்றைய தினம் நடந்த விழாவில் சுமார் 10 கிராமங்களில் இருந்து கலந்துள்ளனர் என தெரிகிறது. அதன்முடிவில் போலீஸாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி சுமார் 70 பேர் வரை காயமடைந்துள்ளனர்.