எங்கள் ஊழியர்களில் 70% பேர் வீட்டிலிருந்து நிரந்தரமாக வேலையைத் தொடரலாம் என்று ஜெரோதா நிறுவனத்தின் சிஓஓ தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய ஜெரோதாவின் சி.ஓ.ஓ வேணு மாதவ், "எங்கள் பணியாளர்களில் 70% பேர் விற்பனையிலோ அல்லது ஆதரவுப்பணிகளிலோ உள்ளனர், இவர்கள் வீட்டிலிருந்து நிரந்தரமாக பணியைத் தொடரலாம். மேலும் தொழில்நுட்ப குழு, நிர்வாக குழு மற்றும் மனிதவள மேம்பாட்டுக்குழுவின் சில உறுப்பினர்களும் வீட்டிலிருந்தே தொடர்ந்து வேலை செய்யலாம். நேரடியாக பணியில் ஈடுபடும் கட்டாயம் உள்ளவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் மிகப்பெரிய புரோக்கரேஜ் நிறுவனம் ஜெரோதா. இந்த நிறுவனத்திடம் 50 லட்சத்துக்கு மேலே பயனாளர்கள் உள்ளனர். புரோக்கிங் துறையில் நடக்கும் மொத்த பரிவர்த்தனையில் 15 சதவீதம் அளவுக்கு ஜெரோதா வசம் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அசுர வளர்ச்சியை அடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், இதுதான்.