சமூக ஊடகங்களில் பயன்பாடு அதிகரித்ததிலிருந்து அவ்வப்போது சில மனிதநேயமிக்க, நெகிழ்ச்சிகரமான செய்திகளை நம்மால் பார்க்கமுடிகிறது. அதுபோல் தற்போது 7 வயது சிறுவன் ஒருவனின் கதையை ராகுல் மிட்டல் என்ற டிவிட்டர்வாசி ஒருவர் தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சொமேட்டோவில் டெலிவரிமேனாக வேலை செய்துவந்த தனது தந்தை விபத்துக்குள்ளான பிறகு குடும்பத்திற்கு பண உதவி செய்ய, தந்தையின் வேலையை கையில் எடுத்துள்ளார் 7 வயது சிறுவன். பகல் நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் இவர் மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் தனது சைக்கிளிலேயே பல கிலோமீட்டர் தூரம் சென்று உணவு டெலிவரி செய்துவருகிறார்.
மைக்ரோ-பிளாக்கிங் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் ராகுல் 7 வயது சிறுவனிடம் பேசும் உரையாடல் பகிரப்பட்டுள்ளது. அந்த 7 வயது சிறுவன் வீடுவீடாக தனது சைக்கிளிலேயே சென்று உணவு டெலிவரி செய்கிறார். தனது தந்தையின் செல்போனுக்கு வரும் ஆடர்களை தான் டெலிவரி செய்துவருவதாகவும் கூறுகிறார்.
பதிவேற்றப்பட்ட வீடியோவில் இருந்து சம்பந்தப்பட்ட சிறுவனின் பெயர் திருத்தப்பட்டு நீக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் அந்த பயனர் சிறுவனின் பெயரை பாலத் ஷா என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுவனின் தந்தை உயிருடன் இருப்பதாகவும், அவருடைய சூழ்நிலையால் வேலைக்கு வரமுடியவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அந்த சிறுவன் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவருகிறது.
இதை பார்த்த சில நெட்டிசன்கள் குழந்தை தொழிலாளிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு சிறுவனின் முன்னெடுப்புக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். மேலும் சிறுவனின் தந்தை விரைவில் குணமடையும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.