தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மோகன்புரா மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு கடந்த 3 ஆம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். அங்கும் அதைச் சுற்றியுள்ள கோயில்களிலும் வழிபட்டு விட்டு நேற்று சொந்த ஊருக்குத் திரும்பினர்.
வரும் வழியில் புலந்த்ஷர் பகுதியில், நரோரா பகுதியில் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் வந்த வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைக்கப் பட்டுள்ள நடைபாதையில் தூங்கினர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் வேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 4 பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.