சிக்கிம்: 150 பேர் திரண்டிருந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு.. 7 பேர் பலியான சோகம்!
சிக்கிம் மாநிலம் நாது லா மலைப்பாதையில் ஜவஹர்லால் நேரு சாலை இணைப்பு பகுதியான காங்டாக்கில் இன்று மதியம் 12.15 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்ட போது அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து 4,310 மீட்டர் உயரத்தில், சீன எல்லையில் அமைந்துள்ள நாது லா கணவாயானது முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று. பனிச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 5-6 வாகனங்களில் 20-30க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பனிச்சரிவு காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் பனியின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 14 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை சிக்கிம் காவல்துறை, சிக்கிம் டிராவல் ஏஜென்ட்கள் சங்கம், சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, மண்வெட்டி கொண்டு பனியை அகற்றும் பணியில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.