தாய்நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதாக "நியு வேர்ல்ட் வெல்த்" என்ற அமைப்பின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதன்படி, 7000 இந்திய கோடீஸ்வர்கள் 2017ம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இங்கிருந்து வெளியேறும் அவர்கள், அமெரிக்கா, ஐக்கிய அரபு, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளைத் தேர்வு செய்வதாக சர்வதேச பொருளாதார இடப்பெயர்வு தொடர்பான இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
புதிய உலகில் சொத்துகளின் இடப் பெயர்வு குறித்து ஆய்வு செய்தபோது, இந்தியாவில் மட்டுமின்றி, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் இதுபோன்ற இடப் பெயர்வு அதிகமாக உள்ளது. அதோடு, இந்த இடப்பெயர்வு ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 2017ல் 7 ஆயிரமாக இருந்த இது, 2016ல் 6 ஆயிரமாகவும், 2015ல் 4 ஆயிரம் எனவும் இருந்துள்ளது.
கோடீஸ்வரர்களின் வெளியேற்றம் இந்தியாவில் நடப்பதாகச் சொல்வதற்கில்லை. 2017ல் சீனாவில் இருந்து 10 ஆயிரம், துருக்கியில் இருந்து 6 ஆயிரம், இங்கிலாந்தில் இருந்து 4 ஆயிரம், பிரான்ஸில் இருந்து 4 ஆயிரம் மற்றும் ரஷ்யாவில் இருந்து 3 ஆயிரம் கோடீஸ்வரர்கள் தங்களது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறுபவர்கள், விரும்பி செல்லும் நாடுகளின் பட்டியலில் பலரது தேர்வாக இருப்பது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள்தான்.
அதிக கோடீஸ்வர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்தியாவில், 2017ம் ஆண்டு நிலவரப்படி, 3 லட்சத்து 30 ஆயிரத்து 400 கோடீஸ்வரர்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.