சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கப்பட்ட சைனிக் பள்ளிகள், இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேருவதற்கு தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. 1961 ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகத்தால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிராந்திய, சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளை இந்திய ராணுவத்தில் இருந்து களையும் முயற்சியாக இவை தொடங்கப்பட்டன.
சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல்ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாடமி அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவது பள்ளியின் நோக்கமாகும். தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
இத்தகைய பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, சைனிக் பள்ளிகள் சங்கம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பின் வலிமையைப் பொறுத்து 50% கட்டணத்தை வழங்குகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பயிற்சி மானியமாக வழங்கப்படும். கடந்த 2021இல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய மத்திய அரசு, தனியார் பங்களிப்போடு நாடு முழுவதும் மேலும் 100 புதிய சைனிக் ராணுவப் பள்ளிகள் அமைக்க திட்டமிட்டது.
அந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 40 தனியார் பள்ளிகளுடன் சைனிக் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் சுமார் 62 சதவீத தனியார் சைனிக் பள்ளிகள் சங்பரிவார், பாஜக நிர்வாகிகள், மற்றும் பிற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது என தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, 40 புதிய சைனிக் பள்ளிகளில், 10 பள்ளிகள் பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமானவை என்றும் 8 பள்ளிகள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கும், 6 பள்ளிகள் பிற இந்து அமைப்பினருக்கும் வழங்கியிருப்பதாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கிறிஸ்தவ, இஸ்லாம் அமைப்பின் கீழ் செயல்படும் இந்தியாவின் எந்தவொரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பள்ளிகள் பெரும்பாலும் குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவை. இதனால் விமர்சனம் எழுந்துள்ளது.