இமயமலையில் இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஜப்பானின் நிகாட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான கனிம வளங்களைக் கொண்ட கடல் நீர்த்துளிகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த நீர்த்துளிகள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் கார்பனேட்டுகள் இரண்டையும் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை புவி அறிவியல் மையத்தின் (CEaS) பி.ஹெச்டி மாணவரான பிரகாஷ் சந்திரா ஆர்யா பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு பூமியின் வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான ஆக்ஸிஜனேற்ற நிகழ்வுகளில் நுண்ணிய பார்வைகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
700 முதல் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி கடினமான பனிப்பாறைகளால் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டு இருந்தது. இந்த ஆண்டுகளைத் தொடர்ந்து பூமியில் இரண்டாவது ஆக்ஸிஜனேற்ற நிகழ்வு நடந்தது. இது வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்கவும், உயிரினங்களின் பரிமாணத்திற்கும் வழிவகுத்தது. ஆனாலும், பண்டைய பெருங்கடல்கள் காணாமல் போனதாலும் பண்டைய புதைவடிவங்கள் முழுமையாக இல்லாததாலும் இந்த நிகழ்வுகளுக்கு இடையேயான தொடர்புகளை முழுமையாக கண்டறிவதில் சிக்கல் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட சில கடல் பாறைகள் இதில் சில பதில்களை வழங்கியுள்ளன. இன்றைய பெருங்கடல்களுடன் ஒப்பிடும்போது பழைய கடல்கள் வேற்பட்டவையா அல்லது ஒரே மாதிரியானவையா? அக்கடல்கள் அமிலத்தன்மை கொண்டதா அல்லது காரத்தன்மை கொண்டதா?, ஊட்டச்சத்து நிறைந்ததா அல்லது குறைபாடுள்ளவையா, சூடானதாகவா அல்லது குளிர்ந்து இருந்ததா, அவற்றின் இரசாயன மற்றும் ஐசோடோபிக் கலவை என்ன?" இத்தகைய நுண்ணய கேள்விகள் கடந்த கால காலநிலையைப் பற்றிய சில பதில்களை வழங்கக்கூடும். மேலும் இத்தகைய பதில்கள் காலநிலை மாதிரியாக்கத்திற்கு (climate modelling) பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நீர்த்துளிகள் பண்டைய கடல்களின் நிலைகள் அதாவது அதன் ஹைட்ரஹன் திறன் (pH), வேதியியல் தன்மைகள், ஐசோடோபிக் கலைவைகள் போன்றவற்றின் தகவல்களை வழங்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.