முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளநிலையில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்தனர். இதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எழுந்துள்ள வரவேற்பு மற்றும் எதிர்ப்பு குறித்துப் பார்க்கலாம்.
காங்கிரஸ் எதிர்ப்பு!
1.ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் முற்றிலும் தவறானது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இந்தியாவின் உணர்வோடு ஒத்துப்போகாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. மாணிக்கம் தாக்கூர்
அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?. மூன்று இலங்கையர்களின் குற்றத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆதரிக்கிறாரா?. கண்களை மூடிக்கொண்டு தீவிரவாதிகளுக்கு எப்படி உதவ முடியும்” என விமர்சித்துள்ளார்.
3. கார்த்தி சிதம்பரம்
இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தீர்ப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடைய தண்டனை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கொலையாளிகளை யாரும் கொண்டாடுவதை ஏற்க முடியாது. இவர்கள் ஹீரோக்கள் அல்ல” என விமர்சித்துள்ளார்.
4. திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், “உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு எதிர்காலத்திற்கான சரியான முடிவு என எடுத்து கொள்ளக்கூடாது. ராஜீவ் காந்தி மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை நினைத்துப்பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தமாக, ஜி.கே.வாசன்!
தீர்ப்பு தொடர்பாக புதிய தலைமுறைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையிலும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக வரவேற்பு - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்று நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையில் இருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் அமர்வு தீர்ப்பு அளித்திருக்கிறது.
தி.மு.க.வை பொருத்தமட்டில் எதிர்க்கட்சியாக இருந்த போதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை முதன் முதலில் 2000-ம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தான். தமிழக ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்த போதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்கப்பட்டது. பேரறிவாளனை உச்சநீதிமன்றம் முதலில் விடுதலை செய்தது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது இன்று மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்தது இரண்டாம் வெற்றியாக பார்க்கப்படுகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
வைகோ
இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக அளித்தப் பேட்டியில், “தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை ராம்ஜெத்மலானி வழக்கறிஞர் மூலம் காப்பாற்றினேன். தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆளுநர் இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்துள்ளார்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், 26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்டோரும் தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிக - விஜயகாந்த்
அதேபோல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்த தீர்ப்பு காலதாமதம் ஆனாலும் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் உள்ளிட்ட ஒரு சிலர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்களா? என்பது அவர்கள் சிறையில் இருந்து விடுதலையான பிறகே தெரியவரும்.
சீமான்
”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்!” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- விக்னேஷ்முத்து, சங்கீதா