சத்தீஸ்கரில் மானை வேட்டையாடிய 6 பேரை வெவ்வேறு இடங்களிலிருந்து வனத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்புர் மாவட்டத்திலுள்ள அச்சனக்மர் புலிகள் வாழும் பகுதியில் வனத்துறை அதிகாரிகள், புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக திங்கட்கிழமை 6 பேரை கைதுசெய்ததுடன் அவர்களிடமிருந்து 35 கிலோ மான் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.
சிவ்தாரை கிராமத்தில் புலிகள் நடமாடும் பகுதியில் மின் வயர்களை வைத்து மான்களை வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் சனிக்கிழமை இரவிலிருந்து அங்கு ரோந்துபணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மோட்டார்சைக்கிளில் சென்ற விவேக் நெல்சன்(29) மற்றும் மெக்சோன் ஜார்ஜ்(35) ஆகிய இரண்டுபேரையும் சந்தேகத்தின்பேரில் மடக்கிய போலீஸார் அவர்களிடமிருந்து 10 கிலோ இறைச்சியைக் கைப்பற்றினர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் போர்டே மற்றும் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சுரேஷ் உரோன், புத்ராம்(30), புவ்னேஷ்வர் போர்டே(45) ஆகிய 4 பேரையும் வனத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். மானை வேட்டையாடிய குற்றத்திற்காக குற்றவாளிகள் 6 பேர்மீதும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்களுடைய வீடுகளில் நடத்திய சோதனைகளில் புத்ராமின் வீட்டிலிருந்து 25 கிலோ இறைச்சி மற்றும் கூரிய ஆயுதங்கள், வில், அம்பு, ஸ்டீல் வயர்கள் போன்றவற்றையும் கைப்பற்றினர்.