கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள தேசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவருடைய பாட்டி உழிகம்மா(66), உடல்நலக்குறைவால் பெங்களுருவில் காலமானார். இதையடுத்து, சுரேஷ் தனது பாட்டியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி பெங்களூரில் இருந்து, தனது குடும்பத்துடன் உயிரிழந்த பாட்டியின் சடலத்தை காரில் வைத்தபடி சொந்த ஊரான பெல்லாரிக்கு புறப்பட்டுள்ளனர்.
அப்போது, சித்ரதுர்க மாவட்டம் ராம்புரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்தது. அந்த நேரத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் இருந்த சுரேஷ்(40), மல்லி(25), பூமிகா (9) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த நாகம்மா(31), தாயாம்மா(56) தன்ராஜ்(39) மற்றும் கார் ஓட்டுநர் சிவு (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராம்புரம் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த தனது பாட்டியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு சென்ற போது ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, கர்நாடக மாநிலத்திலேயே பெங்களூருவில் இருந்து பெல்லாரி மாவட்டத்தில் மற்றொரு ஈமசடங்கில் கலந்து கொள்வதற்காக நிர்மலா(55) மற்றும் குடும்பத்தினர் காரில் பயணித்தனர். அப்போது, சித்ரதுர்க மாவட்டம் மதகரிபுர கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார், முன்னாள் சென்று கொண்டிருந்த பால் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த நிர்மலா (55) வினோதா(40) மற்றும் இரண்டு வயது குழந்தை யஷஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பாண்டிராஜ்(36), ரஷ்மி (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டு, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் ஒரே மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க பயணித்த இரண்டு குடும்பத்தார் கோர விபத்தில் சிக்கி, அதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.