சொந்தமாக வீடு வாங்குவதோ அல்லது கட்டுவதோ என எதுவாக இருந்தாலும் அது எல்லோருக்கும் சுலபமாக அமைவதில்லை. அதேநேரத்தில், இந்த வீடு கட்டும் அல்லது வாங்கும் விஷயங்களில் சமீபகாலமாகவே மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் கொல்கத்தாவில் 6 குடியிருப்புகளை 125 முறை பத்திரப்பதிவு செய்துள்ள பகீர் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்பறியும் துறையின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மோசடியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த கட்டடத்தின் உரிமையாளர் ஒருவர் தன்னுடைய ப்ளாட்களை விற்பதாகவும், அவர் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் மூலமே அந்தச் சொத்துகளை வாங்குவதற்காக பலமுறை மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்காக அவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுக்கடன் பெற்றுள்ளனர். கர்தாவில் 11 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட கட்டடம், இந்த மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிளாட் ஒன்றின் உரிமையாளர் பிரதிமா சர்க்கார். அவரது தலைமையில், கட்டடத்தில் உள்ள 11 அடுக்குமாடி குடியிருப்புகளையும் விற்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக தனியார் வங்கியில் மட்டும் ரூ.1.2 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.
இந்த மோசடி வேலைக்காக, 6 அடுக்குமாடி குடியிருப்புகள் 125 முறை பதிவு செய்யப்பட்டுள்ளன என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஆறு வங்கிகளிடம் கடன் மோசடி செய்திருப்பதாகவும், அந்த வகையில் ரூ.10 கோடி வரை கடன் பெற்றிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி ஜனவரி 2021 முதல் 2023 இறுதிவரை தொடர்ந்துள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.