ஹிமாச்சல பிரதேசத்தில் பள்ளி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பள்ளி குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசம், சங்கரா டவுன் பகுதியில் தேவ் பப்ளிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டிற்கும் அழைத்து செல்லும் வகையில் பள்ளி நிர்வாகம் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை வீட்டில் இருந்து ஏற்றிக்கொண்டு பேருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ராம் சுவரூப் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, சிர்மாவூர் அருகே வரும்போது பேருந்து நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீர் (5), ஆதர்ஸ் (7), கார்த்திக் (14), அபிஷேக், சஞ்சனா, நைட்டிக் சவுகான், மற்றும் ஓட்டுநர் ராம் சுவரூப் ஆகிய 7 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தியா, ரக்ஷிதா, அஞ்சலி, ராஜிவ், ஆயுஷ், வைஸ்னவி, த்ருவ், மன்னாத், ஆருஷி, சுந்தர் சிங் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.