மாதம் ரூ.3,500 சம்பளம்.. ஆனால் மனதளவில் வள்ளல்.. : ஆந்திர போலீஸை நெகிழவைத்த பெண்..!
ஆந்திராவில் கடும் வெயிலில் ஊரடங்கு பணியை மேற்கொண்டிருந்த காவலர்களை ஒரு பெண் மனிதநேயத்தால் நெகிழ வைத்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஆந்திராவில் கடும் வெயிலில் பணியாற்றிக்கொண்டிருந்த போலீஸாருக்கு 55 வயது பெண் ஒருவர் மனிதநேயத்தால் நெகிழ்ச்சி அளித்துள்ளார்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பணியிலிருந்த போலீஸாரின் அருகே வந்த அப்பெண், தனது பையில் இருந்து இரண்டு குளிர்பானங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அப்போது போலீஸார் ஏன் இதைக்கொடுக்கின்றீர்கள் என விசாரிக்க, தங்களுக்குக்காக கடும் வெயிலில் பணியாற்றும் உங்களுக்கு தான் கொண்டு வந்தேன் என கூறியிருக்கிறார் அப்பெண். இதைக்கேட்டதும் தாங்கள் வெயிலில் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து அங்கிருந்த அனைத்து போலீஸாரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அப்பெண்ணின் மாத சம்பளம் ரூ.3,500 தான் என்பதை அறிந்த போலீஸ், அந்த குளிர்பானங்களை வாங்கிக்கொள்ளாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் தினந்தோறும் நீங்கள் எங்களை வந்து பாருங்கள், அதுவே எங்களுக்கு உற்சாகமளிக்கும் எனக்கூறி நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த போலீஸ் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, ஆந்திர டிஜிபி வரைக்கும் சென்றிருக்கிறது. இதையடுத்து வீடியோ மூலம் அப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர டிஜிபி கெளதம் சவாங்கி, ஒரு ராயல் சல்யூட்டும் அடித்துள்ளார்.