கர்நாடக மாநிலம் ஹம்பியில் 500 ஆண்டுகள் பழமையான மாம்பழத் தோட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹம்பியில் கண்டறியப்பட்டுள்ள இந்த மாமரங்கள் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் நடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மாமரங்கள், 300 முதல் 500 ஆண்டுகள் வயது கொண்டவையாக இருக்கலாம் என்கிறார்கள் தோட்டக்கலை வல்லுநர்கள். தற்போதுள்ள பதிவுகளின்படி, இந்த மாம்பழத் தோட்டம் குரங்களுக்காகவே பிரத்யேகமாகவே அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனாலேயே இந்த தோட்டம் கோதிமான்யா (குரங்குகளின் வாழ்விடம்) என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள இந்த தோட்டம் ஏற்கனவே 3 மரங்களை இழந்துவிட்டதாகவும், மற்ற மரங்களும் வீழ்வதற்கு முன்பாக, அதனைப் பாதுகாக்க அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 முதல் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த தோட்டத்தில் தற்போது 12 அல்லது 13 மரங்கள் உள்ளன. சுமார் 80 முதல் 100 அடி உயரம் கொண்ட அந்த மரங்கள் 12 முதல் 13 அடி சுற்றளவு கொண்டதாகவும் உள்ளன.