கோச்சிங் சென்டர்களால் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை

கோச்சிங் சென்டர்களால் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை
கோச்சிங் சென்டர்களால் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை
Published on

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள கோச்சிங் சென்டர்களால் 60 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 ஆம் வகுப்பில் 95 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த சம்யுக்தா, ஹைதராபாத்தில் உள்ள முன்னணி நீட் கோச்சிங் சென்டரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சேர்ந்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆக விரும்பிய அவர், கடந்த திங்கள் கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துள்ள குறிப்பில், தன்னால் நீட் பாடத்திட்டங்களை சரியாக கையாள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த 2 மாதங்களில் மட்டும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக என்.டி.டி.வி ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தைகள் உரிமை அமைப்புகள், இந்த தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்தபோது அவற்றுள் பெரும்பான்மையானவை, போட்டி தேர்வுகளால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட சம்யுக்தாவின் தந்தை ஒரு டாக்ஸி ஓட்டுநர். அவர் தன் மகள் இறப்பு குறித்து பேசும்போது, “நான் மற்ற குழந்தைகளின் பெற்றோருடன் பேசும்போது கூட, உங்களுடைய குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த கல்லூரிகளில், பாடங்களில் பயில வாய்ப்பு கொடுங்கள் என்று அறிவுரை கூறுவேன். ஆனால் என் மகளுக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார்.

இந்த செய்தி பரவிக் கொண்டிருக்கும்போதே, ஒரு குழந்தை மற்ற மாணவர்கள் முன்பு இரக்கமில்லாமல் ஆசிரியரால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி வைராலாகப் பரவியது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. நேற்றைய தினம்தான் இந்த பிரச்னை இவ்வளவு பூதாகரமாவதை இருமாநில அரசுகளும் கவனித்துள்ளன.

முதல்கட்டமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் கார்பரெட் கல்லூரிகளின் மேலாளர்களை சந்தித்து மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்வது குறித்து பேசி எச்சரிக்கை செய்துள்ளார். இருமாநிலங்களும் தற்போது சில முக்கியமான முடிவுகள் எடுத்து அவற்றை பள்ளி, கல்லூரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. குறிப்பாக, 8 மணி நேரத்திற்கு மேல் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக்கூடாது. மாணவர்களை வார்த்தைகளாலோ, தாக்குவதன் மூலமோ காயப்படுத்துவதோ, துன்புறுத்துவதோ கூடாது. மேலும், பள்ளிகள் கட்டாயமாக பயிற்சி பெற்ற ஆலோசகர்களை மாணவர்களைக் கையாளப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர் அச்சிதா ராவ் இதுகுறித்து பேசும்போது, “இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் எந்த கேள்வியும் இன்றி பல ஆண்டு காலம் இயங்கி வருகின்றன. மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து இழுத்து மூட வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு அச்சம் ஏற்படும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com