“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு

“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு
“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு
Published on

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் 50 லட்சம் பேர் நாட்டில்வேலைவாய்ப்பை இழந்துவிட்டதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

மோடி தலைமயிலான பாஜக அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அத்துடன் பலர் தங்களது வேலையை இழக்க நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ‘ஸ்டேட் ஆஃப் ஒர்க்கிங் இண்டியா’  என்ற வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2016 நவம்பர் மாதத்திற்கு பிறகு நாட்டில் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2011 முதல் 2018 வரை வேலையின்மையின் சதவிகிதம் இரு மடங்கு உயர்ந்து 6% உள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் கிராமங்களில் வேலை பார்ப்பவர்களின் சதவிகிதம் 2016ஆம் ஆண்டில் 72 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த 2018ஆம் ஆண்டு 68% குறைந்துள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதே கால அளவில், நகரங்களில் வேலை பார்ப்பவர்களின் சதவிகிதம் 68லிருந்து 65% ஆக குறைந்துள்ளது. இந்த வேலை இழப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கிராமங்களில் இருக்கும் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் என்ற அதிர்ச்சி உண்மையும் தெரிவந்துள்ளது.

அத்துடன் நாட்டில் இன்னும் சில ஆண்டுகளில் நகர்புறத்தில் அதிகளவில் மக்கள் வசிக்கவுள்ளதால் அங்கு நிலவபோகும் வேலையின்மையை தவிர்க்க ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை போல் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது நகர்புறங்களிலும் மக்களுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஒரு நாளுக்கு ரூ.500 சம்பளமாக அளிக்க வேண்டும் என இந்த அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com