கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரியும் 50 சதவீதம் இந்தியப் பெண்களுக்கு வீட்டில் இருக்கும் வேலை மற்றும் குழந்தை வளர்ப்பால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலானவர்கள் குழந்தைகள் உள்ள பெண்கள் என்பதும், அவர்கள் அலுவலகப் பணிகளுடன் குழந்தை வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்பு காரணங்களால் வெளியில் சொல்லமுடியாமல் தவித்துவருகின்றனர். கொரோனா காலத்தில் மன அழுத்தம் மற்றும் கவலையால் 47 சதவீத பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 38 சதவீத ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெண்ணும் இயல்பான நாட்களைவிட கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் கூடுதலாக முக்கால் மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். அலுவலக வேலைகளுக்கும் வீட்டிற்கும் இருந்த மெல்லிய இடைவெளி ஊரடங்கு நாட்களில் குறைந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வீட்டில் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு அலுவலக வேலைகளில் ஈடுபடுவது சிரமமாக இருப்பதாக 42 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். வீட்டுப் பணிகள் நெருக்கடியால் அந்த நேரத்தை நேர்செய்வதற்காக இரவில் வெகுநேரம் பணியாற்றுவதாக 46 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு தொடர்பாகப் பேசிய ஜாப்ஃபார்ஹர் நிறுவனத் தலைவர் நேஹா பாஹாரியா, " கொரோனா காலகட்டத்தில் வேலையில் ஆண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் பெண்கள் குழந்தைகளைக் கவனிப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்" என்கிறார்.