ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் பற்றி எரிந்து ஐந்து இந்திய வீரர்கள் உயிரிழந்தது தீவிரவாதிகளின் செயல் என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி அருகே இந்திய ராணுவ வாகனத்தில் பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோட் என்ற பகுதியை நோக்கி ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிற்பகல் 3 மணியளவில் அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த எதிர்பாரா விபத்தில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
எனினும் எவ்வாறு ராணுவ வாகனம் தீப்பற்றியது என்பது தொடர்பான விவரங்களை ராணுவம் உறுதிப்படுத்தாமல் இருந்த நிலையில் நேற்று மாலை நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணைக்கு பிறகு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். கன மழை மற்றும் அந்த பகுதியில் பார்வை மங்கலாக உள்ள சூழலைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசி, அதன் மூலம் ராணுவ வாகனத்தை தாக்கி இருக்கலாம் என்றும் ராணுவத்தினர் தங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இறந்த ராணுவ வீரர்கள் 5 பேரும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்ட ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் ராணுவம் தெரிவித்திருக்கிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு ராணுவ வீரருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சதிச் செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் ராணுவம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.