கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்த பாம்பை கொல்வதற்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன.
புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவிலுள்ள அவ்சரி என்ற கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இங்கு கரும்பு அறுவடையில் விவசாயிகள் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த தோட்டத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் அதைக் கொல்ல முயன்றனர். அப்போது பாம்பு, புதருக்குள் சென்றது. அதைக் கொல்வதற்காக, செடியும் செத்தையுமாக கிடந்த அந்த இடத்தில் தீ வைத்தனர். தீ மளமளவென்று எரிந்தது. இதில், அந்த இடத்தில் இருந்த 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக பலியாயின.
தீ எரிந்து முடிந்ததும் சிறுத்தைப்புலி குட்டிகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, உயிரிழந்த சிறுத்தை குட்டிகளைக் கைப்பற்றினர். அந்தக் குட்டிகள் பிறந்து 15 நாள் முதல் 20 நாட்கள் ஆகியிருக்கலாம் என வனத்துறை அதிகாரி பிரஜோத் பால்வே தெரிவித்தார்.
‘’தாய் சிறுத்தை வெளியில் சென்றிருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. திரும்பி வரும் தாய் சிறுத்தை ஊருக்கும் வர வாய்ப்பிருப்பதால் கண்காணிப்பில் இருக்கிறோம். சிறுத்தைப் பழிவாங்கும் என்று விவசாயிகள் மீண்டும் இந்தப் பகுதிக்கு வரப் பயப்படுகின்றனர்’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதே பகுதியில், கரும்புத்தோட்டத்தில் இருந்து ஏற்கனவே 2 சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.