கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எந்தப் புகாரும் இதுவரை பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கொடுக்கப்படவில்லை. புகார் தராததால் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சற்று யோசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகைகளில் வந்த செய்திகள் அடிப்படையில் தேசிய பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து இதனை கையில் எடுத்திருக்கிறது. அதன்படி இதில் நடந்த விஷயங்கள் என்ன என்பது குறித்து கேரள டிஜிபி உடனடியாக அறிக்கை அளிக்க உத்தரவு போட்டுள்ளது. மேலும் விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னணி?
கேரளாவை சேர்ந்த கிறிஸ்துவ பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார். அது அவரை மிகவும் காயப்படுத்த, தனது மத வழக்கப்படி ஆலய பாதிரியாரிடம் சென்று விஷயத்தை கூறி பாவ மன்னிப்பு கோரியுள்ளார். கிறிஸ்துவ மத வழக்கப்படி பாவ மன்னிப்பு சடங்கு சமயத்தில் மக்கள் கூறுவதை பாதிரியார்கள் எக்காரணம் கொண்டும் வெளியே கூறக் கூடாது. ஆனால் அந்தப் பாதிரியாரோ சம்பந்தப்பட்ட பெண்ணை இந்த விவகாரத்தை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு இன்னும் 4 பாதிரியார்களிடம் கூறி அவர்களை கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அவரது கணவருக்கு தெரிய வர, பாதிரியார்கள் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.