மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரின் நெவாசா தெஹ்சில் வாட்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உபயோகமற்ற கிணறு ஒன்று உள்ளது. இதில், நேற்று (ஏப்ரல் 9) மாலை பூனை ஒன்று விழுந்துள்ளது. அதைக் காப்பாற்றுவதற்காக ஒருவர் இறங்கியுள்ளார். அந்தக் கிணற்றில் சேறு அதிகமாக இருந்ததால் அதில் அவர் சிக்கியுள்ளார். அத்துடன் கிணற்றின் விஷ வாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார்.
இதைப் பார்த்த இன்னொருவர், அவரைக் காப்பாற்ற இறங்கியுள்ளார். இப்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர்.
இதில் 5 பேர் பலியான நிலையில், ஒருவர் மட்டும் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவல் துறையினர், கிணற்றில் விழுந்த உடல்களை மீட்கும் பணியைத் தொடங்கியபோது, அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் கிணறு முழுக்க சேறு அதிகமாக இருந்ததால், உடல்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மேற்கு வங்கம்: பரப்புரையில் மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்பி.. வெடித்த சர்ச்சை!