மத்தியப்பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் விளைநிலத்தில் ஆடு புகுந்த விவகாரத்தில் டாங்கி மற்றும் பால் ஆகிய சமூகத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மோதல் நீடித்துள்ளது. இதனால், பேச்சு வார்த்தையில் தீர்வு காணலாம் என்று முயன்ற நிலையில், பேச்சு வார்த்தையின்போதே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மோதலின்போது, மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு இரு தரப்பும் சரமாரியாக தாக்கியதில், கூடிய ஊர் மக்கள் அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். அரை மணி நேரத்திற்கு துப்பாக்கிச்சூடு நீடித்த நிலையில், 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் டாடியா மாவட்டம் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் தொகுதி என்பதால் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக பேட்டியளித்த போலீஸ் அதிகாரி, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் பெற்ற 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.