கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால், டெல்லியே ஆட்டம் கண்டுவிட்டது. டெல்லியின் பிரதான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பிரகதி மைதான் சுரங்கப்பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்ததால் அந்தப் பகுதியில் வாகனப்போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் கனமழை பாதிப்பில் இருந்து தப்பவில்லை. மருத்துவமனை கட்டடத்திற்குள் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள், லிப்ட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கசிந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதியடைந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில், கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த இடத்தில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்தன. தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் சுவர் இடிந்த விபத்தில் 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதேபோல், நொய்டாவில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் மழைநீரில் விளையாடச் சென்ற இரண்டு சிறுவர்கள், தண்ணீர் தேங்கிய ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தனர்.