கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாப்பச்சன். 82 வயதான இவர் பிஎஸ்என்எல் பொறியாளராக இருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டருகே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த கார் ஒன்று அவரை மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார் பாப்பச்சன். அவரைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறவே இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாப்பச்சனை மோதி விட்டுச் சென்ற காரில் இருந்த crash footage-ஐ ஆய்வு செய்தனர். முடிவில் இது தற்செயலான விபத்து இல்லை என்பதும் அவர் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
கொல்லத்தில் தனது குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்த பாப்பச்சன் எதனால் கொல்லப்பட்டார்? அவருக்கு எதிரிகள் யாரும் இருக்கின்றனரா? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் பாபச்சனின் மகள் சொன்ன ஒரு தகவல் போலீசாருக்கு இவ்வழக்கில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
அதன்படி 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற பாப்பாச்சன், பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்து தனது நிதியை புத்திசாலித்தனமாக நிர்வகித்து வந்துள்ளார். அவரது மரணத்திற்கு ஒரு மாதம் முன்புதான், ஜவஹர் பால பவன் அருகே உள்ள இந்தியா இன்ஃபோலைன் ஷேர் டிரேடிங் (ஐஐஎஃப்எல்) மூலம் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பங்குகளை விற்று அதை அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளார்.
அச்சமயத்தில்தான் திடீரென அவர் வைத்திருந்த ரூ. 90 லட்சம் நிலையான வைப்புத் தொகையில் இருந்து அவரது அங்கீகாரமின்றி ரூ. 40 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாளரான சரிதாவிடம் பாப்பச்சன் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு உரிய பதிலளிக்காத சரிதா, அவரை சமாளிக்கும் நோக்கத்தில், “இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்” என்று உறுதியளித்து, கணக்குகளை சரிபார்த்து மற்றொரு நாளில் சந்திப்பதாகக் கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.
பாப்பச்சனின் மகள் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவிக்கவே வங்கியில் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. அதன்படி வங்கி மேலாளர் சரிதா, பாப்பச்சனின் கையொப்பம் இடப்பட்ட இரண்டு 20 பக்க காசோலை புத்தகங்களை வைத்திருந்துள்ளார்.
அதுமட்டுமல்லாது பாப்பச்சனின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் சரிதாவின் உறவினர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சரிதாவை கைது செய்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு, இந்த கொலையை செய்தது சரிதா மற்றும் அவரது கூட்டாளிகள்தான் என்பது தெரிய வந்துள்ளது
பாப்பச்சன் தனது வங்கியில் வைப்புத் தொகை வைத்ததையடுத்து அவரது பின்புலத்தை தெரிந்து கொண்ட சரிதா, அவர் தற்போது தன் குடும்பத்தோடு இல்லாமல் தனியே வசித்து வருகிறார் என்பதையும் அவர் இறந்துவிட்டால் அவரது பணத்தை தேடி யாரும் வர மாட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டு அவரது பணத்தை மோசடி செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனால் 45 வயதான வங்கி மேலாளர் சரிதா, நிறுவனத்தின் கணக்கு நிர்வாகியான 37 வயதான அனூப் மற்றும் இரண்டு ஊழியர்களான 47 வயதான மஹீன் மற்றும் 27 வயதான சாகிப் அலி ஆகியோர் இணைந்து பாப்பச்சன் கணக்கில் இருந்து 40 லட்சத்தை மோசடி செய்து தனது உறவினர்களின் வங்கி கணக்குகளில் வைத்துள்ளார். ஆனால் பாப்பச்சன் அது குறித்த கேள்வி எழுப்பவே அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஏற்கனவே குற்ற சரித்திரம் கொண்ட ஒப்பந்த கொலையாளி அனிமோன் என்பவரை இக்கொலைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி அனிமோன் வாடகை காரை எடுத்து பாப்பச்சனை கொலை செய்துள்ளார். இவை அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரிய வரவே சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.