தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ளநிலையில், அதற்கான வரவேற்பு கீதம் (Welcome Anthem) வீடியோ வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி, நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக அதுவும் தமிழகத்தில் தான் நடைபெற உள்ளதால், மிகவும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.
செஸ் போட்டியாளர்களை வரவேற்கும் வகையில், ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் 44-வது செஸ் ஒலிம்பியாட் கீதத்தின் (44TH Chess Olympiad 2022 Anthem) ப்ரோமோ வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று முழு வீடியோவை இயைசமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இதுபோன்ற ஒரு உண்மையான சர்வதேச நிகழ்வுக்கு, கீதம் இயற்றும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செஸ் கீதத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசைமையத்துள்ளார். இருவரும் இணைந்து பாடல் வரிகளை எழுதியுள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருந்தா நடனம் அமைத்துள்ளார். கிரண் கலையமைப்பில், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சென்னை மாநகரின் புனித ஜார்ஜ் கோட்டையையும், மெரினா கடற்கரையையும் இணைக்கும் பாலமான நேப்பியர் பாலம், செஸ் போர்டு தீம்மான கருப்பு, வெள்ளையில் காட்சியளிக்க, மாமல்லபுரத்தில் ஒளிரும் விளக்குகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான், அதிதி சங்கர் ஆகியோருடன் செஸ் விளையாட்டு வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், வர்ஷினி வேலவன், மானுவல் ஆரோன், சசிகிரண் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.