வடமாநிலங்களில் தொடரும் புழுதிப்புயல், மழை காரணமாக 41 பேர் பலியாகியுள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் காசியாபாத், சஹாரான்புர் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் 18 பேர் உயிரிழந்தனர். சாலை, ரயில், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.
இதேபோல், மேற்குவங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் உயிரிழந்தனர். டெல்லியில் 109 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் பெய்த கனமழைக்கு இருவர் உயிரிழந்தனர். இதேபோல், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
10 நாட்களுக்கு முன் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப் புயல் வீசியதால் 134 பேர் உயிரிழந்தனர். 400 பேர் பாதிக்கப்பட்டனர்.