நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக ஹரியானாவின் சிர்சா பகுதியில் 118 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாகவும், டெல்லியின் அயநகர் பகுதியில் 116 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பல்வேறு மாநிலங்களில் ஹீட் ஸ்ரோக் எனப்படும் வெப்பவாதத்தினால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 17 பேர் ஹீட் ஸ்ரோக்கால் உயிரிழந்துள்ளனர். இதேபோல், பீகார் மாநிலத்தில் 14 பேரும், ஒடிசாவில் ஐந்து பேரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 25 பேர், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் தேர்தல் பணிகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, வெப்பவாதத்தினால் பாதிக்கப்பட்டு 1,300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.