ரவுடி ஜாமீன் பெற்றதை கொண்டாட நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்களுடன் 40 ரவுடிகள் பங்கேற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் பிரபல ரவுடியான சன்னி நந்தி இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் இருந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லை என சிகிச்சைக்காக ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இடைக்காலம் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 8ஆம் தேதி இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இதனை கொண்டாடும் வகையில் ஸ்ரீ ஷயாம் வாட்டிகா என்ற வளாகத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தில் டெல்லி மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த நவீன் காத்தி என்ற பெரும் ரவுடிக் கும்பலைச் சேர்ந்த 40 ரவுடிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவலை, சன்னி நந்தியை ரகசியமாக கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த காவலர் ஒருவர் காவல்துறைக்கு தெரிவித்தார். இதையடுத்து பெரும் காவல்துறை பட்டாளம் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு விரைந்தது. காவல்துறையினர் பார்த்த ரவுடிகள் அங்கிருந்த தப்பி ஓட முயற்சித்தனர். இருப்பினும் 37 ரவுடிகளை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, 13 பயங்கர ஆயுதங்கள் மற்றும் 3 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை அனைவரும் கைது செய்த போலீசார், கொரோனா கால பொதுமுடக்கத்திற்கிடையே கூடியது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.