வெள்ளிக்கிழமை மதியம் உதவி ஆய்வாளரான பூபேந்திரசிங் 4 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஏ.எஸ்.பி. ராம்சந்திர சிங் நெஹ்ரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் ஊர் மக்கள் ரகுவாஸ் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து குற்றம் செய்த உதவி காவல் ஆய்வாளரையும் தாக்கியுள்ளனர். இதன் பின்பே அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ரகுவாஸ் காவல்நிலையத்தில் பூபேந்திரசிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி காவல்கண்காணிப்பாளரான பஜ்ரங் சிங் இது குறித்து கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான கிரோதி லால் மீனா, ரகுவாஸ் காவல்நிலையத்திற்கு சென்றார். இதன்பின் ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய கிரோதி லால் மீனா, “நான் சிறுமிக்கு உதவி செய்ய வந்துள்ளேன். துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முடிந்த உடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்குவதே எனது முதல் முன்னுரிமை. இது வெட்கப்பட வேண்டிய விஷயம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்த அவர், “லால்சோட்டில் 4 வயது பட்டியலின சிறுமியை போலீஸ்காரர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அசோக் கெலாட் அரசின் திறமையின்மையால் எதேச்சதிகாரமாக மாறிய காவல்துறை, தேர்தல் போன்ற முக்கியமான சந்தர்ப்பத்தில் கூட அட்டூழியங்கள் செய்வதற்கு தயங்குவதில்லை” என தெரிவித்துள்ளார்.