செல்போன் சார்ஜர் பின்னை கடித்த நான்கு வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சிக்மங்களூர் அருகிலுள்ள அல்துரைச் சேர்ந்தவர் இந்த்ரேஷ். இவர் மனைவி லீலா. இவர்களது நான்கு வயது மகன் அபிக்னன். இவனை குளிப்பாட்டி விட்டு வீட்டில் இருந்த சேரில் உட்கார வைத்திருந்தார் லீலா. சுட்டியான அபிக்னன், அருகில் தொங்கிக்கொண்டிருந்த ஒயரை பார்த்தான். அது செல்போன் சார்ஜர், ஒயர். பிளக்கில் சொருகியிருந்த சார்ஜரை ஆன் செய்யாமல் சென்றிருந்தார் இந்த்ரேஷ். அதை இழுத்த அபிக்னன், சார்ஜர் பின்-ஐ வாயில் வைத்து கடித்தான். அடுத்த சில நொடிகளிலேயே மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தான்.
வேலையை முடித்துவிட்டு குழந்தையைப் பார்த்த லீலாவுக்கு அதிர்ச்சி. மூச்சு, பேச்சில்லாமல் கிடந்தான். உடலில் எந்த காயமும் இல்லை. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ’வெளியில் காயம் எதுவும் என்றாலும் இதயம் அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம்’ என்று அவர்கள் கூறினார்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ‘இது பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை’ என்று கூறியுள்ளனர்.