இந்தியா-நேபாள எல்லையில் அமைந்திருக்கும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களை ஓநாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. 7 குழந்தைகள், 1 பெண் உள்பட என மொத்தம் 9 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் தூக்கத்தை இழந்து தவித்து வரும் மக்கள், வனத்துறையினருடன் இணைந்து ஓநாய்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த ஓநாய்களைப் பிடிப்பதற்கு ’ஆபரேஷன் பெடியா’ எனப் பெயரிடப்பட்டு, அத்தகைய நடவடிக்கையைத் தொடங்கினர். அதன்படி, ஓநாய்களைக் கண்டுபிடிக்க முதலில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அதைவைத்து அப்பகுதியில் வலைகளும் கூண்டுகளும் வைக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் மீதமிருக்கும் 2 ஓநாய்களைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதேநேரத்தில், ஓநாய்களின் எண்ணிக்கை குறித்த முழு விவரம் தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா, “ஓநாய்களை பிடிக்க 16 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களுடன் 12 மாவட்ட அளவிலான அதிகாரிகளும் அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஓநாய்களைப் பிடிக்கும் வரை அவர்கள் களத்தில் இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஓநாய்கள் அச்சுறுத்தல் உள்ள கிராமங்களில் கதவுகள் இல்லாத வீடுகளில் கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து கிராமங்களிலும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.