திருமாவின் வெற்றிக்கு உதவியது 4 வாக்கு இயந்திரங்களா? - உண்மை என்ன?

திருமாவின் வெற்றிக்கு உதவியது 4 வாக்கு இயந்திரங்களா? - உண்மை என்ன?
திருமாவின் வெற்றிக்கு உதவியது 4 வாக்கு இயந்திரங்களா? - உண்மை என்ன?
Published on

சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் வெற்றிக்கு கடைசியாக எண்ணப்பட்ட 4 வாக்கு எந்திரங்களே காரணம் என்ற தகவல் பரவி வருகிறது. 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அதிமுக சார்பில் சந்திரசேகர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார். 

நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே திருமாவளவனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகுத்து வந்தனர். இதனிடையே 4 வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் அவை ஓரங்கட்டப்பட்டன. இதைத்தொடர்ந்து திடீரென சந்திரசேகர் முன்னணியில் இருப்பதாகவும், திருமாவளவனுக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும் ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து தகவல் அறிவிக்கப்பட்டது. அதிமுகவினரும் பாமகவினரும் உற்சாகத்தில் பூரித்தனர். இது விசிக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பழுதானதாக ஓரங்கட்டப்பட்ட வாக்கு இயந்திரங்களை எண்ணாமல் அறிவிப்பு வெளியிட இருந்ததாகவும் திருமாவளவன் முறையிட்டு பின்னர்தான் அந்த இயந்திரங்கள் எண்ணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளை திருமாவளவன் பெற்றார். ஆகவேதான் திருமாவளவன் வெற்றி பெற்றார் என்ற தகவல் வெளியாகியானது.

ஆனால் இதுகுறித்து களத்தில் இருந்த நமது செய்தியாளரிடம் கேட்டபோது, “பழுதானதால் ஓரங்கட்டப்பட்ட வாக்கு இயந்திரங்கள் கடைசி நேரத்தில் எண்ணப்பட்டது உண்மைதான். இதனால் திருமாவளவனுக்கு மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. 3219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால் கடைசி 4 மிஷின்களில் கிடைத்த வாக்குகள் திருமாவளவனுக்கு கிடைக்காமல் இருந்திருந்தாலும் அல்லது அந்த வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்திருந்தாலும் திருமாவளவனே வெற்றி பெற்றிருப்பார் என்ற சூழ்நிலையே நிலவியது” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் களத்தில் என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில்தான் இருந்தேன் என்றாலும் ஏன் அவ்வளவு காலதாமதம் என்பது எனக்கே இன்னும் விளங்கவில்லை. 

தேர்தல் பார்வையாளர் மற்றும் ஆட்சியாளர் இருவரையும் நேரிலே சந்தித்து விரைவுபடுத்துங்கள் என்று இரண்டு மூன்று முறை நான் முறையிட்டேன். இரண்டு வேட்பாளர்களும் முன்னே பின்னே என்று மிக நெருக்கமாக வந்து கொண்டிருப்பதால் துல்லியமாக நாங்கள் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டியிருக்கிறது. எனவே அவசரம் தேவையில்லை. துல்லியம்தான் தேவை எனத் தெரிவித்தனர். 

தபால் வாக்குகள் கூட மாலை 5 மணிக்கு மேலேதான் எண்ணத்தொடங்கினர். அதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் அவ்வளவு காலதாமதம் ஏன் என எனக்கு புரியவில்லை” எனத் தெரிவித்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com