கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பிஷப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், அவர்கள் தங்கியுள்ள கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜலந்தர் மறைமாவட்ட தேவாலய பேராயர், பிராங்கோ முல்லக்கல். கேரளாவைச் சேர்ந்த இவர் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் இருக்கும் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். 2014 முதல் 2016 வரை பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் இருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிராங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியானார்.
இந்நிலையில் பேராயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட, கன்னியாஸ்திரிகள் அல்பி பல்லாசெரில், அனுபமா, ஜோசபின் வில்லூனிக்கல், அஞ்சிட்டா உரும்பில் ஆகியோரை வெவ்வேறு இடங்களுக்கு தனித்தனியாக மாற்றி, இயேசு மிஷனரிகள் திருச்சபை தலைவர் ரெஜினா கடம்தொட்டு உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரியான நினா ரோஸ்-க்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தங்கியிருக்கும் இடத்தில் இருந்து வெளியேறும் திட்டமில்லை என்று அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.