ஊரடங்கு உத்தரவு காரணமாக கடும் வெயிலையும் மீறி உத்தரப் பிரதேசம் மாநிலம் பெரலேயியில் இருந்து வாரணாசிக்கு நான்கு மாணவர்கள் நடைப்பயணமாக சென்றுக் கொண்டு இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் நடந்தே சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் பல மாணவர்களும் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
இப்படிதான் உத்தரப் பிரதேசம் மாநிலம் பெரேலியில் இருக்கும் ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ரோகித் பாண்டே உள்ளிட்ட 4 நண்பர்களும் தங்களது சொந்த ஊரான வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இவர்களது பையில் புத்தகமும், சில துணிகளும், பிஸ்கட்டுகளும், தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே இருக்கின்றன. கடந்த 24 மணி நேரமாக பயணத்தை மேற்கொண்ட இவர்கள் பெரேலியில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லக்னோவுக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தனர்.
லக்னோவில் கடும் வெயிலும் வெப்பக் காற்றும் வீசி வருகிறது. இதனை பொருட்படுத்தாத அவர்கள் தங்களது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். லக்னோவில் இருந்து வாரணாசிக்கு மட்டுமே 320 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால், இவர்கள் வாரணாசி சென்றடைய இன்னும் 2 நாள்கள் ஆகும் என தெரிகிறது. இது குறித்து நடை பயணம் மேற்கொண்டு வரும் மாணவர்களில் ஒருவரான கோலு சர்மா கூறும்போது "முதல் ஊரடங்கின்போது எங்களுக்கான பணத்தை குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர், அதனை வைத்து கொஞ்ச நாள் கடத்த முடிந்தது. ஆனால் இப்போது மேலும் நாள்களை கடத்த செலவுக்கு பணமில்லை" என கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில் "நான் தினசரி கூலியை நம்பி வாழும் குடும்பத்தில் இருந்து வந்தவன். இந்தப் பல்கலைக்கழகத்தில் நான் படிப்பதே பெரிய விஷயமாக பார்க்கிறேன். என் குடும்பத்தினர் நான் கேட்பதைவிட நிறைய பணம் அனுப்புவார்கள், ஆனால் இப்போது அவர்களுக்கும் பணமில்லை" என்றார்