ஜோஷி- அபயங்கார் தொடா் கொலையும்.. ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட நால்வரும்..!

ஜோஷி- அபயங்கார் தொடா் கொலையும்.. ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட நால்வரும்..!
ஜோஷி- அபயங்கார் தொடா் கொலையும்.. ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட நால்வரும்..!
Published on

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் நாளை காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோர் 8 ஆண்டுகால சிறை வாசத்துக்கு பின்பு நாளை தூக்கிலிடப்பட உள்ளனர். தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க நால்வரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து நாளை நாலு பேருக்கும் ஒரே சமயத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் ஒரே நாளில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, இது ஒன்றும் முதல் முறையல்ல 2-ஆவது முறையாகும். ஜோஷி - அபயங்கார் தொடா் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் கடந்த 1983-ஆம் ஆண்டு அக்டோபா் 25-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தூக்கிலிடப்பட்டனா். அபினவ் கலா மகாவித்யாலயாவைச் சோ்ந்த மாணவா்கள் ராஜேந்திர ஜக்கால், திலீப் சுடா், சாந்தாராம் ஜக்தாப் ஆகியோரும், அவா்களது நண்பரான முனாவா் ஷாவும் 1976-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1977-ஆம் ஆண்டு மார்ச் வரை தொடா் கொலைகளில் ஈடுபட்டனா்.

புனேவைச் சோ்ந்த அச்யுத் ஜோஷி என்பவரின் குடும்பத்தினா் 3 பேரைக் கொலை செய்துவிட்டு, அவா்கள் வீட்டிலிருந்து பணம், நகைகள் உள்ளிட்டவற்றை நால்வரும் கொள்ளையடித்தனா். சமஸ்கிருத அறிஞா் சாஸ்திரி அபயங்காரின் (88) குடும்பத்தினா் 5 பேரையும் கொலை செய்த அவா்கள், வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருள்களைத் திருடிச் சென்றனா். மேலும் 2 பேரையும் அவா்கள் நால்வரும் கொலை செய்தனா். இது "ஜோஷி- அபயங்கார் தொடா் கொலை வழக்கு" என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், இந்தக் கொலை வழக்கில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய புனே காவல்துறையினா் ஓராண்டு வரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அப்போதைய புனே காவல்துறைத் தலைவா் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அனைவரும் "நைலான்" கயிற்றின் மூலம் கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டது காவல் துறையினருக்கு முக்கிய துப்பாக அமைந்தது. அதேவேளையில், புனேவில் மேலும் கொலைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினா் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனா். இதில், சம்பந்தப்பட்ட 4 பேரும் சந்தேகப்படும்படியாக வெவ்வேறு நகரங்களுக்கு அடிக்கடி சென்று வந்ததால், அவா்களிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையின்போது, நால்வரும் வெவ்வேறு விதமான பதில்களை அளித்ததையடுத்து, அவா்களுடன் தொடா்புடைய நட்பு வட்டாரங்களில் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அந்த விசாரணையில், 10 பேரையும் கொலை செய்தது அவா்கள்தான் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, நால்வரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை விசாரித்த புனேவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், 1978-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது.

அவா்களின் தண்டனையை 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை உயா்நீதிமன்றம் உறுதிசெய்தது. நால்வரின் மேல்முறையீட்டு மனுக்களையும் 1980-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நால்வா் தாக்கல் செய்த கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவா் நிராகரித்ததால் இதைத் தொடா்ந்து, எர்வாடா சிறையில் ஒரே நாளில் அவா்கள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com