பெங்களூரு வெடிகுண்டு விபத்து: 2-வது நாளாக தொடரும் NIA விசாரணை – 4 பேர் கைது... இதுவரை நடந்தது என்ன?

பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு விபத்து
பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு விபத்து Twitter
Published on

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கி வரும் பிரபல ராமேஸ்வரம் கேப்பே உணவகத்தில் நேற்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன், என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே அங்கிருந்த சிசிடிவிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் இடத்தில் மர்ம நபர் ஒருவர், ஒரு பையை கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றுள்ளார். அந்தப் பை 10 வினாடியில் இரண்டு முறை வெடித்துள்ளது. அந்தப் பை அருகில் அடையாள அட்டை, பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து, வந்த உளவுத்துறை ஏடிஜிபி சரத்சந்திரா, டி.ஜி மற்றும் ஐ.ஜி.பி அலோக் மோகன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து பேசிய ஐ.ஜி.பி அலோக் மோகன் கூறுகையில், “ராமேஸ்வரம் ஓட்டலில் மதியம் ஒரு மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது. FSL குழு அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்கள்” என்றார். இரண்டாவது நாளாக தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது, பேட்டரி, எல்.இ.டி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதை வைத்து தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் ஒரு பக்கம் விசாரணை மேற்கொண்டு வந்தாலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உணவகத்தின் வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் வெள்ளை நிற தொப்பி அணிந்து பேருந்தில் வந்து உணவகத்திற்குள் சென்று டோக்கன் வாங்கி ரவை இட்லி சாப்பிட்டு விட்டு, தான் கொண்டு வந்த கை பையை ஹோட்டலில் வைத்துச் சென்றுள்ளார். அந்த நபர் வேக வேகமாக சென்று அரசு பேருந்தில் ஏறிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது அந்த நபர் சென்ற பிறகு ஒரு மணி நேரம் கழித்து குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததுள்ளது. அருகில் இருந்த அனைத்து சிசிவிடி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அவர் சென்ற பேருந்து ஏசி பேருந்து என்பதால், பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். சிசிடிவிகளை பின் தொடர்ந்து சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்திற்கு இடமாக தொப்பி அணிந்து சென்ற நபர் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல

மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பும், ராமேஸ்வரம் உணவகம் குண்டு வெடிப்புக்கும் பயன்படுத்திய பொருட்கள் பொருந்தியதால், மங்களூர் வழக்கில் கைதாகி பரப்பன அக்ராஹார மத்திய சிறையில் உள்ள சாரிக் மற்றும் அவருடைய கூடாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நபர், உடுப்பியில் இருந்து வந்ததாக கூறப்படுவதால், உடுப்பி, கேரளா போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பான நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில், பயங்கரமான வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கடந்த 2008, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் பயங்கரவாத அமைப்புகளால் நிகழ்த்தப்பட்டவை. இச்சம்பவங்களில் எல்லாம் பல பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி ஏதோ..?!

பெங்களூரு நகரில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் குண்டுவெடிப்பு
பெங்களூரு நகரில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் குண்டுவெடிப்பு

பெங்களூரில் கடந்த காலங்களில் நடந்த பெரிய குண்டுவெடிப்புகள்!

2008 - பெங்களூரில் நடந்த முதல் பெரிய குண்டுவெடிப்பு இதுதான். கடந்த 2008 ஆம் ஆண்டு 9 இடங்களில் நடந்தது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இதை, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகியிருந்தனர். 20 பேர் காயமடைந்தனர். ஒன்றரை மணி நேரத்தில் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

2010: சின்னசாமி மைதானத்தில் குண்டுவெடிப்பு

ஏப்ரல் 17, 2010 அன்று, RCB மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. மைதானத்திற்குள் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர், மற்றொன்று மைதானத்திற்கு வெளியே செயலிழக்கச் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள், ஏப்ரல் 18 அன்று, மைதானத்தில் மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு பயன்படுத்தப்படும் கல் பிளின்ட்களில் பயன்படுத்தப்படும் கச்சா குண்டுகள் இருந்தது.

2013: பாஜக அலுவலகம் முன் குண்டுவெடிப்பு;

ஏப்ரல் 17, 2013 அன்று பெங்களூரு மல்லேஸ்வரம் 11வது கிராஸில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான ஜெகநாத் பவன் முன்பு வெடிகுண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சையது அலி மற்றும் ஜஹான் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

2014: பெங்களூரை உலுக்கிய சர்ச் ஸ்ட்ரீட் குண்டுவெடிப்பு

டிசம்பர் 28, 2014 அன்று, பெங்களூரின் புகழ்பெற்ற சர்ச் ஸ்ட்ரீட்டில் குறைந்த தீவிரம் கொண்ட மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார். சர்ச் தெருவில் உள்ள தென்னந்தோப்பு உணவகத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில் உள்ள பூந்தொட்டியில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2024-ல் நேற்று இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இன்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் காவல் உயர் அதிகாரிகளுடம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதை அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரவேஸ்வரா உறுதி செய்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். இச்சம்பவத்தை அரசியலாக்க வேண்டாமென அம்மாநில பாஜக-வை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com