19,567 கி.மீ யாத்திரை... புதிய மத்திய அமைச்சர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த பாஜக திட்டம்

19,567 கி.மீ யாத்திரை... புதிய மத்திய அமைச்சர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த பாஜக திட்டம்

19,567 கி.மீ யாத்திரை... புதிய மத்திய அமைச்சர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த பாஜக திட்டம்
Published on

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. இதில் புதிதாக 40 பேர் அமைச்சர்களாக இணைந்தனர். இந்த 40 பேரில் 39 அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அடுத்த 3 முதல் 10 நாட்களுக்கு தங்கள் தொகுதிகளிலும், தொகுதியை தாண்டியும் 19,567 கி.மீ தூரம் யாத்திரையாக பயணம் செய்து மக்களைச் சந்திக்க இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 'ஜன் ஆசீர்வாத் யாத்திரை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயல்திட்டத்தில் 22 மாநிலங்கள், 212 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் மொத்தம் 265 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

பாஜகவின் 40 புதிய அமைச்சர்களில் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் பிஷ்வேஷ்வர் துடு மட்டும் உடல்நலக்குறைவு காரணங்களால் ஜன் ஆசீர்வாத் யாத்திரையில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக யாத்திரையை பார்க்கிறது ஆளும் பாஜக தலைமையிலான அரசு. 

இது தொடர்பாக 'இந்தியா டுடே'-க்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், "பாரம்பரிய முறையில் நாடாளுமன்றத்தில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை. எனவேதான் இந்த யாத்திரை மூலம் அமைச்சர்கள் தங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி கொள்வார்கள். அனைத்து இணை அமைச்சர்களும் ஆகஸ்ட் 16-க்குள் ஜன் ஆசீர்வாத் யாத்திரையை மேற்கொள்ள இருக்கின்றனர். கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள் 19-ம் தேதி யாத்திரையை தொடங்குவார்கள். 

இந்த யாத்திரையின் மூலம் 1,663 முக்கிய நிகழ்ச்சிகளை நிகழ்த்த பாஜக விரும்புகிறது. இதில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் தடுப்பூசி கூட்டங்களும் அடங்கும். அனைத்து அமைச்சர்களும் தங்கள் தொகுதி மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளிலும் யாத்திரை செல்ல கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. மற்ற அமைச்சர்களை விட சிறு மற்றும் குறு தொழில்துறை இணை அமைச்சர் நாராயண் ரானே அதிகபட்சமாக 7 நாட்கள் யாத்திரை செல்ல இருக்கிறார்" என்று தகவல் தெரிவித்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com