நாடாளுமன்றத்தில் கொரோனா பாதிப்புகள் பற்றிப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், கொரோனா காரணமாக உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சருக்குப் பதிலளித்துள்ள இந்திய மருத்துவ கூட்டமைப்பு, கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்த 382 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் தியாகிகளாக போற்றப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்புப் பணிகளில் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காக நின்ற தேசிய நாயகர்களை மத்திய அரசு கைவிட்டது என இந்திய மருத்துவ அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
செப்டம்பர் 16 ம் தேதிவரையில் நாட்டில் 2,238 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதில் 382 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.