ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதன்முதலாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு தீவிரவாத தாக்குதல்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் என பல்வேறு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நடக்கக்கூடிய மற்றும் வரக்கூடிய தகவல்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 32 பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் அதிலும் கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வெளிமாநிலத்தவர்களை குறிப்பாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் பணிபுரியக்கூடிய சாதாரண தொழிலாளர்களையும், அரசு பள்ளி ஆசிரியர்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தங்களது உயிருக்கு பயந்து ஏராளமான வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில் தான் மூன்று நாள் பயணமாக மாநிலத்திற்கு சென்று உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஸ்ரீநகர் சென்ற அமித்ஷாவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். கடந்த ஜூன் 22ஆம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீர் காவல்துறையை சேர்ந்த காவல் ஆய்வாளர் பர்விஸ் அஹமத் அவர்களின் குடும்பத்தாரை அவர்களது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் மனைவிக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் பணிக்கான ஆணையையும் அவர் நேரில் வழங்கினார்.
இதனையடுத்து 12.30 மணி அளவில் ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பவனில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இதில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை சமீபமாக அவர்களது செயல்பாடுகள் பொதுமக்கள் கொல்லப்படுதல் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஊடுருவல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் மிக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 4.45 மணி அளவில் ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களிடம் காணொலிக் காட்சி வாயிலாக அமித்ஷா கலந்துரையாடினார். ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலும் இளைஞர்களே தீவிரவாதிகளால் அதிகம் இழுக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து ராஜ்பவனில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீநகர் மற்றும் ஷார்ஜா இடையிலான சர்வதேச விமான போக்குவரத்தை காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்.
அமித்ஷா அவர்களுடைய வருகையை அடுத்து ஸ்ரீநகர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது வான் வழியாகவும் சாலைகளில் எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐம்பதிற்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை குழுக்கள் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய 700 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் ராணுவம் சிஆர்பிஎப் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நாளைய தினம் ஜம்மு விற்கு பயணப்படும் அமித்ஷா அங்கும் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகள் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் அங்கு அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்ற உள்ளார். திங்கட்கிழமை ஜம்முவில் உள்ள கிராம தலைவர்களுடன் உள்ளூர் நிலவரம் குறித்து பேசவிருக்கிறார். உள்ளூர் மக்களில் சிலரின் உதவியால்தான் தீவிரவாத இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீரில் சுதந்திரமாக செயல்படுகிறது என பரவலான குற்றச்சாட்டு இருக்கும் சூழலில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான இந்த முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து தனது மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்த டெல்லி திரும்புகிறார். இவ்வாறு அரசியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அமித்ஷா அவர்களுடைய இந்த சமூக பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- டெல்லியிலிருந்து நிரஞ்சன்