சபரிமலை ஐயப்பனே கோவிலுக்கு வயதான பெண் போன்று வேடமிட்டு 36 வயது பெண் 18 படி ஏறி சாமி தரிசனம் செய்ததாக கூறியுள்ளார். சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் இளம்பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் புதுயுக கேரளம் என்ற முகநூல் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன்படி கேரளம் மாநிலம் சாத்தனூரைச் சேர்ந்த மஞ்சு எனும் இளம் பெண்ணியவாதி 8 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் இருமுடி கட்டுடன் 18 ஆம் படி வழியாக சன்னிதானத்திற்கு சென்று நெய் அபிஷேகம் உள்பட பூஜைகளில் பங்கேற்றதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் பக்தர்களின் எதிர்ப்பு வரும் என்ற காரணத்தால் ததைமுடிக்கு வெள்ளை நிற டை அடித்து 50 வயது பெண் போன்ற தோற்றத்துடன் சபரிமலைக்கு சென்றுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதம் திறக்கப்பட்டது. ரெஹானா பாத்திமா முதல் ஸ்வீட்டி மேரி வரை ஐயப்பன் கோவில் சன்னிதானம் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தங்களது முயற்சியை கைவிட்டனர். மேலும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தடியடி சம்பவமும் நடைபெற்றது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பல முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து நவம்பர் 27 ஆம் தேதி சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டது. அதனையடுத்து மகர விளக்குப் பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இப்பூஜைக்காக கோயிலின் நடை ஜனவரி 19 ஆம் தேதி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம் மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். இப்படியாக ஜனவரி 2 ஆம் தேதி காலை கேரள அரசு ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் பிந்து மற்றும் கனக துர்கா எனும் 40 வயதுடைய பெண்கள் அதிகாலை சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தது. இதனையடுத்து கேரள மாநிலம் முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. கேரள மாநில ஆளுநர் மாநில அரசிடம் சட்டம ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை கேட்குமளவிற்கு விவகாரம் சென்றது.
சபரிமலை தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பி.ஆர்.ராமசந்திர மேன்ன், என்.அனில் குமார் அமர்வு விசாரித்து வருகிறது. இவர்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு பல கேள்விகளை முன் வைத்தனர் அதில் "சபரிமலை கோவில் பக்தர்கள் நிம்மதியாக வந்துச் செல்ல வேண்டிய இடம். ஒருபோதும் அதன் புனிதம் பாதிக்கக் கூடாது. பிந்து - கனகதுர்கா ஆகியப் பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து ஏதாவது மறைமுக திட்டம் இருக்கிறதா ? அவர்கள் இருவரையும் வேறு யாரேனும் இயக்குகிறார்களா என்பதை மாநில அரசு விசாரிக்க வேண்டும்" என கோரியிருந்தனர்.
இந்நிலையில் மாறு வேடத்தில் சென்று சாமி தரிசனம் செய்ததாக மஞ்சு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேரள ஊடகங்களுக்கு பேட்டியளித்த மஞ்சு "நான் கடந்த 8 ஆந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தேன். சபரிமலை செல்வதற்கு போலீசில் அனுமதி எதுவும் பெறவில்லை. ஆதலால் போலீசாரின் பாதுகாப்பின்றி பக்தர்களின் எதிர்ப்பில்லாமல் 18- ஆம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். சாமி தரிசனம் செய்ய எனக்கு எந்த வித இடையூறும் ஏற்படவில்லை" என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவலை கேரள அரசோ, கேரள போலீஸார் உறுதி செய்யவில்லை.