பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் சென்ற வாரம் பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, திங்கட்கிழமை புதிய அரசின் 31 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
முன்னாள் பீகார் முதல்வர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட 16 ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அமைச்சர்கள் பதவியேற்றனர். துணை முதல்வராக சென்ற வாரம் பதவியேற்ற தேஜஸ்வி யாதவின் சொந்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ஆகியோருக்கும் ஆளுநர் பகு சௌஹான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்சா கட்சியை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு நிதிஷ்குமார் அமைச்சரவையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இலாகாக்கள் குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி உள்துறை அமைச்சகத்தை தன்னிடம் வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேஜ் பிரதாப் யாதவுக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த விஜய் குமார் சவுத்ரிக்கு நிதி அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- கணபதி