வல்லபாய் படேலின் சிலை அமைந்துள்ள பகுதியில் வாழும் முதலைகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் குஜராத் மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி 182 மீட்டர் உயரம் கொண்ட வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். குஜராத் மாநிலத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைக்கப்பட்ட அச்சிலை உலகின் உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. ரூ. 3 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட வல்லபாய் படேலின் சிலை ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படுகிறது. அதிக பொருட்செலவில் இந்தச் சிலை உருவாகி உள்ளதாகவும் தற்போது இதன் தேவை என்னவென்றும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் இந்தச் சிலை மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. வல்லபாய் படேலின் சிலை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான முதலைகள் வாழ்ந்து வருகின்றன. வல்லபாய் படேல் சிலையை காண நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு காரணமாக முதலைகளை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யும் வேலையில் மாநில அரசு இறங்கியுள்ளது. இதற்காக பிரமாண்ட இரும்பு கூண்டுகள் தயார் செய்யப்பட்டு சாலை மார்க்கமாக முதலைகள் குஜராத்தின் மேற்கு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சரியாக எத்தனை முதலைகள் இருக்கும் என்று கணக்கிடப்படாத நிலையில் இதுவரை 12க்கும் அதிகமான முதலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலைகளின் இடமாற்றம் குறித்து பேசிய வனத்துறை அதிகாரி அனுராதா சஹு, வல்லபாய் படேலின் சிலையை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு கருதி முதலைகளை இடமாற்றம் செய்ய மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி முதலைகள இடமாற்றம் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சிலை அமைந்துள்ள பகுதி முதலைகள் வாழ ஏதுவான பகுதியாக உள்ளது. இந்த இடத்தை விட்டு இடமாற்றம் செய்வது முதலைகளுக்கு வாழ்வியலுக்கு எதிராகவும் அமையலாம். புதிய இடம், முதலைகளின் இனப்பெருக்கத்துக்கு தடையாக அமையும் வாய்ப்பு உள்ளதாகவும் விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் முதலைகளை இடமாற்றம் செய்யாமல் வேறு ஏதாவது நடவடிக்கை எடுக்க மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.