30 மாணவர்களுக்கும் ஒரே ஊசி - அலட்சியமாக பதிலளித்த மருத்துவ அலுவலர்! போலீஸ் வழக்கு பதிவு

30 மாணவர்களுக்கும் ஒரே ஊசி - அலட்சியமாக பதிலளித்த மருத்துவ அலுவலர்! போலீஸ் வழக்கு பதிவு
30 மாணவர்களுக்கும் ஒரே ஊசி - அலட்சியமாக பதிலளித்த மருத்துவ அலுவலர்! போலீஸ் வழக்கு பதிவு
Published on

மத்திய பிரதேசத்தில் 30 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஒரு ஊசியை பயன்படுத்தி கொரோனா மருந்தை செலுத்திய சுகாதார அலுவலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் ஜெயின் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இன்று காலை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சுகாதார அலுவலர் ஒருவர் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். ஆனால் ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மாற்றாமல் மற்ற மாணவர்களுக்கும் அவர் பயன்படுத்தி வந்தார். இதனை உடனடியாக யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில், அருகில் இருந்த ஆசிரியை சுகாதார அலுவலரின் இந்த செயலை கவனித்துவிட்டார். அதற்குள்ளாக 30 மாணவர்களுக்கு ஊசி செலுத்தப்பட்டு விட்டது.

இதையடுத்து, அவரிடம் அந்த ஆசிரியை இதுகுறித்து கேட்கவே அவர் அலட்சியமாக பதிலளித்திருக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தெரியவந்த மாணவர்களின் பெற்றோரும் சுகாதார அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மறுமுறை பயன்படுத்தக் கூடாது என உங்களுக்கு தெரியாதா என பெற்றோர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அந்த சுகாதாரத்துறை அலுவலர், "எனக்கு அது தெரியும். ஆனால் அதிகாரிகள் எனக்கு ஒரே ஒரு ஊசியைதான் அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இதுகுறித்து நான் கேட்டபோது, ஒரு ஊசியை மட்டுமே பயன்படுத்துமாறு அவர்கள் கூறினர். எனது மேலதிகாரிகள் பேச்சைதான் நான் கேட்க முடியும்" என அசால்ட்டாக கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சுகாதார அலுவலர் ஜிதேந்திரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த முகாமை ஏற்பாடு செய்த மாவட்ட நோய் எதிர்ப்பு அதிகாரியான மருத்துவர் ராகேஷ் ரோஷனிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

'ஒரு ஊசி - ஒருமுறை மட்டும்' நடைமுறை

இந்தியாவில் 1990 வரை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் ஒரே ஒரு ஊசியை பலருக்கு மருத்துவர்கள் செலுத்தி வந்தனர். ஒருமுறை செலுத்தப்பட்ட ஊசியை கொதிக்கும் நீரில் போட்டு பின்னர் மீண்டும் அதே ஊசியை பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில், ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்துவதும் எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் எனக் கண்டறியப்பட்டது. பின்னர் படிப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் 1990களில் இந்த நடைமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் புதிய ஊசி செலுத்தும் நடைமுறையே இப்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், அரசாங்கத்தின் சுகாதாரத் துறையில் பணியாற்றும் அலுவலர் ஒருவர், மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தியது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com