சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஓர்ச்சா மற்றும் பர்சூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கோவல், நெந்தூர், துள்துளி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தனிப்படைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் இந்த கிராமங்களில், மாவோயிஸ்ட்களை நோட்டமிட்டனர். அதன் ஒருபகுதியாக, சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தார் பகுதியில் இருந்த மாவோயிஸ்ட் முகாம் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இதில், 30 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் மாவோவிஸ்ட்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களைப் பின்தொடர்வதில் பாதுகாப்புப் படையினர் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்போது ஒரு பெரிய அளவிலான வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.