சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
ராம் ரஹிமின் ஆதரவாளர்கள் ஊடக வாகனங்கள், போலீசார் மீது கல் வீசி தாக்கினர், வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தினர். பஞ்சாபில் ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்குகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. சிர்சாவில் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. வன்முறைகளில் 30 பேர் பலியானதாகவும் 250 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்த குர்மீத் ராம் ரஹிம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராம் ரஹிமுக்கு தண்டனை விவரங்கள் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரோதக் அருகிலுள்ள இடத்தில் தற்காலிக சிறை ஏற்படுத்தப்பட்டு அதில் ராம் ரஹிம் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ரோதக் மார்க்கமாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.