புனேவில் இன்று காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உட்பட ஒரு பொறியாளர் என மொத்தம் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பவுதான் புத்ருக் என்ற பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தீப்பித்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் பரம்ஜித் சிங் மற்றும் ஜி.கே பிள்ளை என்ற இருவர் மற்றும் ஒரு பொறியாளர் என மொத்தம் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, புனே முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் புனே பெருநகரப்பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் நான்கு தீயணைப்பு டேங்கர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஹெரிடேஜ் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் என்பதும், அதில், VT EVV என்ற பதிவு எண் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர் தேசியவாத காங்கிரஸ் கட்சியால் வாடகைக்கு எடுக்கப்பட்டு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் தெரிவந்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தற்போதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போல கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையின் ஜூஹூவில் இருந்து ஹைதராபாத் சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரும் விபத்துள்ளான நிலையில், அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.