புனேவில் 11-வது மாடியில் இருந்து வாலிபரை கீழே தள்ளி கொலை செய்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புனே கோந்துவா பகுதியைச் சேர்ந்தவர் சாகர் சில்வரி (வயது24). இவர் கல்லூரியில் படிக்கும் மாணவர்களான அபினவ், அக்சய், தேஜஸ் ஆகியோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில், சாகர் மூன்று பேரிடமும் வட்டிக்கு ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அவர்கள் சொன்ன தேதியில் சாகர் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் 3 பேர் தங்களின் பணத்தை திருப்பி தரும்படி வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தனது அறைக்கு வந்த சாகரிடம் பணம் கேட்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரமடைந்த அவர்கள் சாகரை பிடித்து 11-வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்த சாகரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே சாகர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோந்த்வா போலீசார் சாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.