திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
திரிபுராவில் கடந்த பிப்ரவரி 16 ஆம்தேதி 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்றுவரும்நிலையில், அதனிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட மேலும் சில கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. 259 வேட்பாளர்கள் இங்கு களத்தில் உள்ளனர்.
நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் கடந்த 27 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்தில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு தொகுதியில் தற்போதைய பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. கசேடோ கினிமி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் 369 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட ஐக்கிய ஜனநாயககட்சி, காங்கிரஸ், பாரதிய ஜனதா, மக்கள் ஜனநாயகக் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. இம்மூன்று மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்குகின்றன.