இரண்டு மாத கைக்குழந்தையை பார்த்துவிட்டு பணிக்கு திரும்பிய ராஜஸ்தான் வீரர், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் வீர மரணம் அடைந்தனர். அதேபோல் ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று வீரர்களில் ஒருவரான ரோஹிடாஸ் லாம்பாவுக்கு தற்போது தான் பெண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தை பிறந்து இரண்டே மாதத்தில் ரோஹிடாஸ் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஹிடாஸ் கோபிண்ட்புரா என்ற கிராமத்தில் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக இருந்த ரோஹிடாஸின் மனைவி இரண்டு மாதத்துக்கு முன்னர் தான் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தகவல் அறிந்து ஊருக்கு வந்த ரோஹிடாஸ், விடுமுறைக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை தான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
பிறந்து இரண்டே மாதத்தில் தந்தையை இழந்துள்ள அந்த பெண் குழந்தைக்காக சமூக வலைதளங்களில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த பெண் குழந்தைக்கு இந்தியாவே துணை நிற்கும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
தாக்குதல் குறித்து கூறிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கோழைத்தனமாக இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். இந்தியாவே உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.